மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்

Loading...

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்

அலைபாயும் கூந்தலை பராமரிக்க…..
நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன்? தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி? உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும்?
கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படிப் பராமரிப்பது? எந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம்? முடிக்கு எண்ணெய் தடவலாமா? தேவை இல்லையா? என்கிற அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார்கள் டிரைகாலஜிஸ்ட் தலத் சலீம் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

சுத்தம் சுகாதாரம் முக்கியம்

வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். தலையில் எண்ணெய் தடவி, ஷாம்பூவால் அலசும் பழக்கம்தான் இன்று பலரிடமும். இதனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான பலனே இல்லாமல் போய்விடும். தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்கும் வழிகள்…

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன. ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளின் தலையில் எண்ணெய் காண்பிப்பது இல்லை. எண்ணெய் தேயத்தால் சருமம் மென்மையும், பளபளப்பும் கூடி, உடல் புத்துணர்ச்சி பெறும். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும்.
பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாக்க வேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவிய பின் தலைவாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.
ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும். இதனால், முடி அடர்த்தியாக வளரும்.
பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டைப் பின்னல் போடுவதால், நீளமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவினால், பயத்தமாவு தேய்த்துக் குளிப்பாட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவுகொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மாவு எண்ணெய் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மாவு சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.
மொட்டை அடித்தால், முடி நன்றாக வளரும். ஆனால், சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைப்படும்.
இரண்டு வயதில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு தலையில் வியர்வை சுரப்பதால், வியர்க்குரு ஏற்பட்டு முடி வளர்ச்சி பாதிக்கும். இதற்கு, கடலை மாவு, பயத்த மாவுடன் பூலாங்கிழங்கை அரைத்துக் குளிப்பாட்டலாம். பன்னீர் ரோஸ், மல்லிகை, முல்லை, ஜாதி போன்ற பூக்களைத் தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரைக் கடைசியாக விடலாம். இதனால் தலை சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

தேவையானவை : சீயக்காய் ஒரு கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு 100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல் 25, காயவைத்த நெல்லிக்காய் 50, பாசிப்பருப்பு கால் கிலோ, மரிக்கொழுந்துக் குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை 3 கப்.
செய்முறை: இவற்றை வெயிலில் காய வைத்து மில்லில்கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள்.
பலன்கள்: பூலான்கிழங்கு, ஷாம்பு தேய்ப்பதன் பலனைத்தரும், எலுமிச்சையால் பொடுகு நீங்கும், பாசிப்பருப்பு, மரிக்கொழுந்து கூந்தல் வாசத்தை மேம்படுத்தும், கரிசலாங்கண்ணி முடியைக் கருப்பாக்கும். கூந்தல் கருகருவெனச் செழிப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும். இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும் போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து ,வடைகளாகத் தட்டி, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால், முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.
வாரம் ஒரு முறை நெல்லிமுள்ளியை தயிரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து மன அழுத்தம் நீங்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வசம்பை தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில்போட்டு, தடவிவந்தால் பேன், பொடுகு வராது.
உடல் சூடு அதிகம் இருந்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கும். கூடவே, கண் எரிச்சலும், உடல் சோர்வும் இருக்கும்.
பஞ்சகல்பம், உடல் சூட்டினைப் போக்கும். கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து, இதனுடன் வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் தலா 10 கிராம் சேர்த்து, இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பால் சேர்த்து அரைத்து, அதைத் தலையில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம்.

Loading...
Rates : 0