இளைஞர்கள் ஏங்குவது இதற்காகத்தானா? ஓர் ஆணின் நெகிழ்ச்சிக் கடிதம் My story #101

Loading...

இளைஞர்கள் ஏங்குவது இதற்காகத்தானா? ஓர் ஆணின் நெகிழ்ச்சிக் கடிதம் My story #101

தோல்வி…. தோல்வி… என எப்போதும் என் வாழ்க்கையில் தோல்வி தான். வெற்றி என்பதை நான் வாழ்க்கையில் ஒரு முறை கூட அனுபவித்தது கிடையாது. கைதட்டல்கள் வாங்க வேண்டும்… என்று ஆசை தான். ஆனால் இருபத்தியேழு வயதாகும் நான் இதுவரை ஒருமுறை கூட கைதட்டல்களை வாங்கவில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிஜம்.

ஏய்.. மக்கு,தண்டச்சோறு,ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல…. என்ற வசவுச் சொற்கள் மட்டுமே எனக்கு கிடைத்த நற்பெயர்கள். ஏய்… இங்க வா… அதத்தூக்கு, இங்க உக்காரு, என்று எப்போதும் என்னை ஒறுமையில் தான் அழைப்பார்கள்.

பள்ளியில் மட்டுமல்ல…. வீட்டிலும் இதே நிலை தான். அப்பா மிகவும் கண்டிப்பானவர், அப்பாவின் வண்டி சத்தம் கேட்கிறது என்றாலே நானும் அண்ணனும் வெளவெளத்து விடுவோம். அறையை சுத்தம் செய்து இருவரும் புத்தகத்துடன் படிக்க உட்கார்ந்து விடுவோம். அவர் வரும் போது ஏதேனும் சிறு பிழை ஏற்பட்டிருந்தால் கூட அடி வெளுத்து விடுவார்.

அன்று எங்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை. தெருவில் இருக்கும் சிறுவர்களோடு விளையாடக்கூடாது…. அவங்க எல்லாம் காலிப்பசங்க வீட்ல உக்காந்து டிவி பாரு… நீயும் அண்ணனும் சேர்ந்து விளையாடுங்க… இந்த ‘கேட்’ விட்டு வெளிய போகக்கூடாது.

வரும் போது எதாவது சொதப்பி வச்சிருந்த அடி வெளுத்துருவேன்…..

சரிப்பா வெளிய போக மாட்டோம்ப்பா என்று இருவரும் தலையசைத்தோம்.

அப்பாவைப் பற்றி பல நேரங்களில் நானும் அண்ணனும் பேசியிருக்கிறோம். அப்பா நல்லவரு தாண்டா நீ குட்டிப்பையனா இருக்குறப்போ அம்மா சாமிக்கிட்ட போய்டுச்சா அப்பறம் அம்மாச்சிக்கும் அப்பாக்கும் பயங்கர சண்ட. சின்ன மாமா உன்னைய தூக்கிட்டு போய்டுச்சு அப்பறம் ஒரு வாரம் கழிச்சி ஒரு ராவுல அப்பா போய் உன்னைய கூட்டிட்டு வந்துச்சு..

நீ அம்மாச்சிட்ட போகணும்னு அழுதுட்டேயிருப்ப…. உன்னைய அப்பா அடிக்கும். குப்பையில போட்ருவேன்னு மிரட்டும். நீ கேக்கவே மாட்ட அழுதுட்டேயிருப்ப என்று அவன் அடிக்கடி ஃப்ளேஷ் பேக் சொல்வான்.

அம்மா இறந்தது, மாமா தூக்கிச் சென்றது, அம்மாச்சியிடம் செல்வேன் என்று அடம் பிடித்தது என்று எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் அப்பா…. ஹிட்லர் அப்பா மட்டும் தான்.

எப்போதும் அப்பா சாப்பிட வீட்டிற்கு வர மாட்டார்.காலையில் சென்றால் மாலை ஏழு மணிக்குத் தான் வருவார். சனிக்கிழமை என்றால் எங்களுக்கு பரோட்டா கிடைக்கும். மற்ற நேரங்களில் வந்து சமைத்துக் கொடுப்பார்.

அன்றைக்கு யார் செய்த பாவமோ மதியம் வீட்டிற்கு வந்து விட்டார். நானும் அண்ணனும் தெருவில் சிறுவர்கள் கோலிக்கொண்டு விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம்.

விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களிடையே வாக்குவதம் முற்றி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் நாங்கள் அதில் லயித்திருந்தோம். இந்நிலையில் அப்பாவின் வண்டிச்சத்தத்தை இருவரும் கவனிக்கவில்லை. மிக அருகில் வந்ததும் தான் கவனித்தோம்.

சட்டென சுதாரிட்த்த அண்ணன். சிறுவர்களின் பின்னால் ஒளிந்து கொண்டான். நான் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றேன். அங்கேயே வண்டியை நிறுத்தி என் காதைப் பிடித்து திருகி பின்னந்தலையில் ஒரு அடி…. சொத்தென்று சற்றுத் தள்ளி விழுந்தேன்.

சண்டையிட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் அமைதியானார்கள்.

என்ன சொன்னேன்…. என்ன சொல்லிட்டு போனேன்….. இந்த கலிசடைங்களோட சேராக்கூடாதுன்னு சொன்னென்னா? என்று என் காதைப் பிடித்து திருகினார். வலியில் துடித்துக்கொண்டே ஆமாப்பா…. ஆமாப்பா என்று அலறினேன்.

அப்பறம் ஏன் வெளிய வந்த…. இங்க என்ன வேல என்று கன்னத்திலேயே அறை விட்டார்.

நீ மட்டும் தானா இல்ல பெரியவனும் உனக்கு கூட்டாளியா? வா…. எங்க அவன் டேய்…. பெரிய எரும என்று என் காதைப் திருகிய படியும் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீடு வரை நடந்து வந்தார்.

எங்கள் பின்னால் அந்த சிறுவர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக் கொண்டே நடந்து வந்தார்கள்.

என்ன தவறு செய்து விட்டேன்…. விளையாடக்கூட இல்லையே அவர்கள் விளையாடியதை வேடிக்கை தானே பார்த்தேன் இதில் என்ன தவறு… இப்படி எல்லார் முன்னாடியும் என்னை அடித்து இழுத்துச் செல்கிறாரே.. நாளைக்கு இந்த சிறுவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து கேலி பேசுவார்களே என்ற பயத்தில் கூனிக்குறுகி நின்றேன்.

டேய்…… என்ற உரக்க கத்திக் கொண்டே முன் கேட்டை திறந்தார். எங்கடா போன ?

ப்பா…. சாக்ஸ் துவச்சு போட்டுட்டு இருக்கேன்ப்பா என்று குவளை நீருடன் பதறியடித்துக் கொண்டு பின்பக்கமிருந்து ஓடிவந்தான் என் அருமை அண்ணன். என்னுடனே இருந்தவன் எப்படி தப்பித்தான், எப்போது வீட்டிற்கு ஓடினான், எப்படி இந்த உடனடி பொய்யை தயார் செய்தான் என்று சத்தியமாய் இன்று வரை தெரியவில்லை.

உங்கம்மா போனப்பவே….. உன்னைய நசுக்கிப் போட்ருக்கணும். வந்து என் ஜீவன வாங்குது பாரு திருட்டுப்பய என்று என்னைத் தள்ளிவிட சற்றித் தள்ளி விழுந்தேன். அவர் வீட்டிற்குள் சென்று விட்டார். கேட்டிற்கு வெளியே நின்றபடி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எல்லா சிறுவர்களும் ஒன்றிரண்டு பெரியவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வாழ்க்கையில் முதன் முறையாக அவமானம் என்றால் என்ன என்பதை உணர்த்திவிட்டார். உண்மையில் அக்கணமே நான் பொசுங்கிச் செத்திடலாம் என்று தான் தோன்றியது.

அப்பா என்றால் என் அகராதியில் பயம், ராட்சசன் என்று தான் பொருள்…. அவர் மீது பயமா அல்லது வெறுப்பா என்று எனக்கு பிரித்தரிய முடியவில்லை. ஆனால் எனக்கு பிடிக்காது…. அப்பா என்றால் அடக்க முடியாத…. இன்னும் சொல்லப்போனால் விவரிக்க முடியாத ஓர் அதீத வெறுப்பாக மாறிப்போனது.

அண்ணன் தனக்கென்ற ஓர் பாதையை வகுத்துக் கொண்டான். கோலிக்குண்டு கதையில் அவன் தப்பித்தக்கதையை சொன்னேனே அது போல சந்தர்ப்பவாதி அதைவிட சாமர்த்தியசாலி….

தனக்கான ஓர் பாதையை வகுத்துக் கொண்டான். தன் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொண்டான்.

இதுவரையில் அப்பாவைத் தாண்டி எனக்கொரு உலகம் இருப்பதாக தோன்றவில்லை
அப்பா என்று சொன்னாலே கை கால்கள் எல்லாம் வெட வெடத்துப் போகும் அளவிற்கு பயந்தாங்கோலியாகவே இருந்தேன்.

கல்லூரி படிக்கும் போது கூட இப்படியான இறுக்கமான சூழல் தான் இருந்தது.

Loading...
Rates : 0